மைக்கேல் சௌல் டேல்
சின்னதாய் ஒரு வணிகம் செய்து, இரண்டாயிரம் டாலர்கள் சம்பாதித்தபோது, டெல்லுக்கு வயது 12. சின்ன வயதிலேயே புத்திசாலித் தனம் பளிச்சிட வளர்ந்த டெல், படிப்பில் அதிக அக்கறை காட்டவில்லை.
எட்டுவயதில், பள்ளி இறுதிப்படிப்பிற்கு நிகரான தேர்வொன்றை எழுதியே ஆக வேண்டுமென அடம்பிடித்த டெல்லை, அந்தத் தேர்வுக்கு அனுப்ப அம்மாவும் அப்பாவும் ஒப்புக் கொள்ளவில்லை.
அந்தத் தேர்வை எழுதிவிட்டால் பள்ளியிறுதி வரை படிக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் டெல் வகுப்பறைச் சூழலில் வளர வேண்டிய அவசியத்தை பெற்றோர் உணர்ந்திருந்தனர்.
எனவே, பள்ளியில் படிக்கும் நேரம் போக, பகுதி நேரத் தொழிலபதிபராக உருவாகிக் கொண்டிருந்தார் டெல்.
பதினான்காவது வயதில் டெல் ஒரு கம்ப்யூட்டரை வாங்கினார். தட்டிப் பழகியதுடன் விட்டுவிடவில்லை. கம்ப்யூட்டரின் பாகங்களைத் தனித்தனியாகக் கழற்றி, பிரித்து மேய்ந்து, மறுபடி மாட்டும் வித்தையைக் கற்றிருந்தார்.
பள்ளி மாணவராக இருந்தபோதே ஹுஸ்டன் போஸ்ட் பத்திரிகை விநியோகப் பொறுப்பை ஏற்ற டெல், பல புதுமைகளைப் புகுத்தினார். புதுமணத் தம்பதிகளின் பட்டியலை வாங்கி, முதலில் இலவசமாகத் தந்து பின்னர் சந்தா கேட்டு, தன் வருமானத்தை 18,000 டாலர்களாக உயர்த்தினார்.
1983இல், ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் டெல் சேர்ந்த போது அவர் மருத்துவர் ஆவார் என்பது அவருடைய பெற்றோர்களின் கனவாக இருந்தது. ஒரு மருத்துவருக்குரிய கூர்மை டெல்லிடம் இருந்தது உண்மைதான். ஆனால் அந்த கவனம் குவித்ததென்னவோ உடல்பாகங்களில் இல்லை…
உதிரி பாகங்களில்தான்.
தான் வாங்கிய கம்ப்யூட்டரைக் கழற்றி மாட்டியபோது 3000 டாலர்கள் விலையுள்ள அதன் மொத்த மதிப்பே 600 டாலர்கள்தான் இருக்கும் என்பது டெல்லுக்குத் தெரிந்தது. இதனை டீலர்கள் 2000 டாலர்களுக்கு வாங்கி 3000 டாலர்களுக்கு விற்கிறார்கள். டீலர்களைத் தவிர்த்து விட்டால் குறைந்த விலைக்கே கம்ப்யூட்டர்களை விற்க முடியும் என்று டெல் தெரிந்துகொண்டார்.
டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் தான் தங்கியிருந்த பொது அறையிலேயே இந்தத் தொழிலைத் தொடங்கினார் டெல். அவர் தங்கி இருந்த 27வது மாடிக்கு வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கினார்கள். இதற்கிடையே டெல்லின் மாத வருமானம் 250000 டாலர்களைத் தாண்டியது. தொழிலில் இன்னும் மும்மரமாக இறங்க வசதியாய், படிப்பைப் பாதியிலேயே விட்டார் டெல்.
டெல்லுக்கு வயது இருபதாகும்போது அவரிடம் முப்பது பேர் பணிபுரிந்து கொண்டிருந் தார்கள். 1987இல், பிசி அன்லிமிடெட் என்ற தன் நிறுவனத்தின் பெயரை டெல் கம்ப்யூட்டர் கார்ப்பரேஷன் என்று பெயர் மாற்றம் செய்த டெல்லின் முழுப் பெயர், மைக்கேல் சௌல் டெல்.
1988இல், பொதுப்பங்குகளை விற்கத் தொடங்கியது டெல் நிறுவனம். அசுர வேகத்தில் வளர்ந்து வந்த டெல் ஒரு லேப்டாப் கம்ப்யூட்டரை உருவாக்கியபோது போட்டியாளர்கள் இன்னும் சிறந்த மாடலை உருவாக்கியிருந்தார்கள். நிறுவனம் பின்னடைவைச் சந்தித்தது.
ஆனால் டெல் அசரவில்லை. அனுபவம் மிக்க புதிய மேலாளர்கள் பலர் நியமிக்கப்பட்டனர். நிறுவனத்தை மறு சீரமைத்ததன்மூலம் லேட்டியூட் எக்ஸ்பி எனும் புதிய லேப்டாப் கம்ப்யூட்டரை டெல் நிறுவனம் உருவாக்கியது.
டெல் நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம், வாடிக்கையாளர்களுக்கு நேரடியாய் விற்பனை செய்ததுதான் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். ஆனால் அந்தப் பின்னடைவு நேரத்தில் இந்தக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய நினைத்தார் டெல். அதற்குள் நிறுவனம் பின்னடைவிலிருந்து மீண்டு விட்டது.
நேரடியாக தனிநபர்களுக்கு விற்பனை செய்வது என்ற நிலையிலிருந்து மாறி கல்வி நிறுவனங்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் நேரடி யாக விற்பனை செய்யத் தொடங்கியது டெல் நிறுவனம்.
40 பில்லியன் டாலர்கள் விற்றுவரவும், 47000 ஊதியர் களுமாக டெல் நிறுவனம் அசுர வேகத்தில் வளர்ந்து ஆசியா விலும் தன்னுடைய ஆளுமையை நிலை நிறுத்தியது.
தொழில் நுட்ப நிலையில் அதிரடி மாற்றங்கள் தொடர் சங்கிலிகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் உலகில் நிமிர்ந்து நின்று நிகரில்லா வெற்றியை எட்டினார் டெல்.
ரெப்ரிஜிரேட்டர் அளவிற்குப் பெரியதாக வந்து கொண்டிருந்த கம்ப்யூட்டர்களை மடியில் அடக்கும் மகத்துவத்துடன் உருவாக்கிய முக்கிய நிறுவனங்களில் முன்னணி நிறுவனம், டெல்.
கம்ப்யூட்டர் விற்பனை என்ற சராசரியான தொழிலை தங்கச்சுரங்கமாக மாற்றிய மகத்தான மனிதர் என்று எழுதியது எகனாமிஸ்ட் இதழ்.
ஓடிக்கொண்டேயிருக்கும் காலத்தின் பாதையில் திருப்பங்கள் உருவாக்கிய சாமர்த்தியமான சாதனையாளர்களில் ஒருவராய் சரித்திரம் படைத்திருக்கிறார் டெல்.
அவரே ஒரு தனி மனித நிறுவனம் என்று சொல்வதுபோல் அவர் பெயரிலேயே அமைந்து இருக்கிறது அவருடைய நிறுவனம்.
-